மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது.

விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் வரும் 2030ல் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சீனா ஒரு பயங்கரமான முயற்சியை மேற்கொண்டு தனக்கென சொந்தமான ஒரு தனி விண்வெளி நிலையத்தை விண்ணில் உருவாக்கி உள்ளது.

சீனா உருவாக்கியுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கு டியாங்கோங் (Tiangong space station) என பெயரிடப்பட்டது. இதற்கு தேவையான பொருட்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி அதற்கான பணியில் கடந்த சில ஆண்டுகளாக சீனா மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை 6 மாத கால சுழற்சியின் அடிப்படையில் தனது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தற்போது வழக்கமான 6 மாத சுழற்சி பணியின் அடிப்படையில் சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் என்ற செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு ஷென்சோ-18 என்ற ராக்கெட் (Shenzhou-18) மூலம் மூன்று விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. விண்ணுக்கு அனுப்பப்பட்ட அந்த மூன்று பேர் சுமார் 6 மணிநேரத்தில் சீனாவின் விண்வெளி நிலையத்தை அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 மாத பயணத்தில் 43 வயதான யே குவாங்ஃபு, 34 வயதான லி காங் மற்றும் 36 வயதான லி குவாங்சு ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று பேரும் முன்னாள் விமானப்படை விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு ஆறு மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, விண்வெளி நிலையத்தின் நிலைப்பாடு மற்றும் அறிவியல் உள்ளிட்ட சோதனைகளை நடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.