தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்..! புரட்சிக் கவி பாரதிதாசனின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் 133-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூறும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891ம் ஆண்டு இதே நாளில் (29 ஏப்ரல்) புதுச்சேரியில், கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கனகசுப்புரத்தினம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவர் வளர்ந்து தமிழாசிரியராகப் பணியாற்றிய போது, சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
பிறகு, 1919ம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியாராகப் பணியாற்றிய பாரதிதாசன், 1920ம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு பிரபல எழுத்தாளரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், தன்னை அரசியலிலும் ஈடுபடுத்திக் கொண்டு, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரது பிறந்தநாளான இன்று சென்னை மேயர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் அவரது உருவச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது நினைவுகள் மற்றும் பாடல்களை நினைவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
அதில், செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும், எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும், தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்” எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் என்றும் துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.