காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.”

“நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.