பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகளும் நன்னடத்தை மற்றும் 1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத் அரசு பரிந்துரையின் பேரில் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது, பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன், என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன். ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன் என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.