சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை, அனைவரின் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்..! மம்தா பானர்ஜி

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று  மாலை 18:04 மணி (6.04 மணிக்கு) அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை! இஸ்ரோ குழு இந்தியாவைச் சேர்ந்தது. அவர்களின் கடின உழைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு சான்றாகும், இது மக்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடமிருந்து வந்ததே தவிர, எந்த அரசியல் நிறுவனத்தாலும் அல்ல.” என்று கூறியுள்ளார்.

மேலும், “வங்காளம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த பணிக்கு பெரிதும் பங்களித்துள்ளனர். இந்தியாவின் சந்திர ஆய்வை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்த அனைவரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்! சந்திராயன்-3 நிலவின் தென் துருவத்தை அடைய நெருங்கி வரும் நிலையில், நாம் அனைவரும் ஒன்றாக நின்று அதன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்கு ஆரவாரம் செய்ய வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.