Cauvery Issue : காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.!

கர்நாடகா மாநில அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம் டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்காவிட்டால் தமிழக அரசு அடுத்ததாக காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்றம் சென்று முறையிடும் என கூறப்படுகிறது. காவிரி ஒழுங்காற்று மையமானது பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும் மாநில அரசுகளுக்கு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூட்டியுள்ளார். இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், மேகதாது அணை கட்டும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டமானது பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் இன்று பகல் 12:30 மணிக்கு நடைபெற உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவும் ஒருமித்த கருத்துகளை கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட தற்போது வாய்ப்பில்லை என்பதே அவர்களின் நிலைப்பாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.