காவிரி நீர் விவகாரம்.! தமிழகத்தில் தொடங்கியது முழு கடையடைப்பு போராட்டம்.! 

இந்த வருடம் பருவமழையானது போதிய அளவில் பெய்யாத காரணத்தால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 31 அடியாக சரிவடைந்து, அணையில் வெறும் 8 TMC அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் சம்பா, தாளடி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டுமே வினாடிக்கு 500 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரியில் இருந்து தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முறைகளில் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நீரை கர்நாடகா அரசிடமிருந்து பெற்றுத்தர போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்தும், காவிரியில் இருந்து உரிய அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், வணிகர் சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் என பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து நடத்தி வருகின்றனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு லாரிகள் சங்க அமைப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் லாரிகள் ஓடவில்லை. வழக்கம்போல அரசு பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டக்காரர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்ட உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான் இன்று டெல்லியில் அவசரமாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.