#BREAKING: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் ரத்து, மீண்டும் அதே பணியில் அமர்த்தப்படுவார் என அறிவிப்பு.

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது தொடர்பாக மதுரை மருத்துவ கல்லுரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை மருத்துவத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை குறித்து விளக்கத்தை அளித்திருந்தார் ரத்னவேல். தற்போது அவர் அளித்த விளக்கத்தை ஏற்று மீண்டும் டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர், தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார். சரக் சபத் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற செய்தி பிப்ரவரி 7ம் தேதி பரவுகிறது.  இதுபோன்று சரக் சபத் உறுதிமொழி என்பது பிற்காலத்தில் மொழி பிரச்சனை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் இன்று பிற்பகலில்  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொள்கிறார். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது.