#BREAKING: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவியை வழங்கியது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவைச் செயலகம். உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து காங்கிரேஸின் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் மக்களவை செல்கிறார் ராகுல் காந்தி. இதனிடையே, ராகுல் காந்தியின் வழக்கு தொடர்பாக பார்க்கலாம். அதாவது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது சூரத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வான ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றங்களை நாடிய ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பின் தனக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்கியது.

அதிகபட்ச தண்டனை வழங்கியதால் ராகுலுக்கு, வயநாடு தொகுதி மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து எம்பி பதவி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவியை வழங்கியது மக்களவை செயலகம்.

இதனால், நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக முதல் பேச்சாளராக பங்கேற்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை இந்தியா கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.