#BREAKING: மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற நடைமுறை ஜனவரி மாதம் முதல் வரும் என முதலமைச்சர் அறிவிப்பு.

டிசம்பர் 3 அதாவது இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  உலக மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

இதன்பின் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்தார். வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவித்தொகை ஜனவரி 1 முதல் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை உருவாக்க உள்ளோம் என்றும் இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் கூறினார்.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், நவீன உபகரண கண்காட்சி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார். 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து பணிபுரிய எதுவாக “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment