#BREAKING: கர்நாடகாவில் மே 10ல் சட்டமன்ற தேர்தல்.. மே 13ல் ரிசல்ட் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம்  நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம்  நடைபெறும் என அறிவித்துள்ளார். கர்நாடகா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேட்புமனு தாக்கல்:

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலினை ஏப்ரல் 21ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற ஏப்ரல் 24-ஆம் த்தேதி கடைசி நாள் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள்:

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 41,312 பேர் உள்ளனர். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக 9 லட்சத்து 17 ஆயிரத்து 241 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதி:

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

மும்முனை போட்டி:

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது.

இடைத்தேர்தல் இல்லை:

காலி என அறிவிக்கப்பட்ட கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையர் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment