#BREAKING: நீட் விலகிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் – ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய காட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி நடைப்பெறும் என கூறப்படுகிறது. நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர், தமிழ் நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

நீட் தேர்வு ரத்து குறித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் ஏற்கெனவே தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையிலும், அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.