டிபியை மாற்றிய பாஜக தலைவர்கள்..! ப்ளூ மற்றும் கோல்ட் டிக்கை நீக்கிய எக்ஸ்..!

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து தனி நாடானதை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் என்பது கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகமான எக்ஸில் (ட்விட்டர்) தனது டிபியை தேசியக் கொடியாக மாற்றினார். இதை நாட்டு மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நமது நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைவரும் இதை செய்வோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு இணங்கி, பல மாநிலங்களின் பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் கணக்கின் டிபியில் தேசியக் கோடியை மாற்றியுள்ளனர். அவர்கள் தங்களது டிபியை மாற்றியதைத்தொடர்ந்து, தங்கள் கணக்குகளில் இருக்கும் ப்ளூ மற்றும் கோல்ட் டிக்கை இழந்துள்ளனர்.

அதன்படி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் எக்ஸில் தங்களது வெரிபைட் குறியீடுகளை இழந்த பாஜக தலைவர்கள் ஆவர்.

இவர்களோடு, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) தங்களது கோல்டன் டிக்கை இழந்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியின் கணக்கில் இருக்கும் சாம்பல் நிற டிக் அகற்றப்படவில்லை.

மேலும், எக்ஸ் தளமானது வெரிபைட் குறியீடுகளுக்கு உண்மையான பெயர்கள் மற்றும் டிபியைப் பயன்படுத்த வேண்டும் என்றக் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, எக்ஸின் கொள்கையைக் பின்பற்றி, இந்தக் கணக்குகள் அனைத்து குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கும் இணங்கினால், அவற்றின் வெரிபைட் குறியீடுகள் திருப்பி வழங்கப்படும்.