Asian Games 2023: 12 வது நாளாக பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா.! வில்வித்தையில் தங்கம் வென்று மிரட்டல்.!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியானது 12 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி, வெற்றிவாகை சூடி பதக்கங்களை வென்று வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கான 50 மீ போட்டி வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணிக்கு எதிராக 230-229 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் இந்தியா வென்ற 19வது தங்கம் ஆகும். அதே போல வில்வித்தை பிரிவில் இந்தியா வென்ற 2 வது தங்கம் ஆகும்.

முதல் சுற்றில் இந்தியா இரண்டு புள்ளிகள் பின்தங்கி இருந்தது. இருப்பினும், இரண்டாவது சுற்றின் ஆறாவது அம்புக்குறியில் சீன தைபே அணி பெற்ற 7 புள்ளிகள் பெற்றதால் இந்தியா முன்னிலைக்குச் சென்றது. இறுதி முடிவில், 230-229 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் 82வது பதக்கம் ஆகும்.

அதன்படி, இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 174 தங்கம், 95 வெள்ளி, 52 வெண்கலம் என 321 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையில், ஓஜாஸ் பிரவின் தியோட்டலே, அபிஷேக் வர்மா மற்றும் பிரதாமேஷ் ஜாவ்கர், இந்திய ஆண்கள் அணி காலிறுதியில் இன்று மதியம் 12:15 க்கு விளையாடுவார்கள்.