ஆசிய சாம்பியன்ஷிப்: முதல் முறையாக கோப்பை கைப்பற்றிய இந்திய அணி..!

தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா  வென்றது.

இந்திய பெண்கள் அணி முதல் முறையாக ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணி இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டத்துக்கான ஆட்டத்தில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா வலுவான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு தாய்லாந்து தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என சமன் செய்தது. இறுதி போட்டியில், 17 வயது அன்மோல் கார்ப் தன்னை விட தரவரிசையில் உயர்ந்த வீரரான சோய்க்வாங்கை(Pornpicha Choeikeewong) தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தாய்லாந்துக்கு எதிரான ஆசிய பேட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து சிறப்பான தொடக்கம் அளித்தார். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் சிந்து 21-12, 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் உள்ள 17-வது வீராங்கனை சுபனிடா கேத்தோங்கை தோற்கடித்தார்.

இதையடுத்து இரட்டையர் ஆட்டத்தில் காயத்ரி கோபிசந்த், த்ரிசா ஜாலி அணியினர் விளையாட வந்தனர்.
அவர்கள் தாய்லாந்தின் கிடிதரகுல் மற்றும் பிரஸ்ஜோங்ஜாய் ஆகியோரை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் 21-16 18-21 21-16 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய சாம்பியன்ஷிப்…பி.வி சிந்து வெற்றி..!

இதனால் இந்தியா 2-0 என முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற  இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹாவை 21-11,21-14 என்ற கணக்கில் தாய்லாந்தின் புசானன் ஒன்பாம்ருங்பன் தோற்கடித்தார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் தாய்லாந்தின் அம்சார்ட் சகோதரிகளுடன் மோதிய இந்திய வீராங்கனைகள் பிரியங்காவும், ஸ்ருதியும் 11-21,9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால் 2-2 கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தனர். கடைசி போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப், தாய்லாந்து வீரர் போர்ன்பிச்சா சோய்க்வாங் உடன் மோதினார். இதில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்  21-14,21-9 என்ற கணக்கில் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக தரவரிசையில் அன்மோல் கர்ப் 427-வது இடத்தில் உள்ளார்.  45வது இடத்தில் உள்ள போர்ன்பிச்சா சோய்க்வாங்(Pornpicha Choeikeewong) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment