“அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்” – ஓபிஎஸ் அறிவிப்பு….!

அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், “பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம்”, என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,பாஜக பிரமுகர் கே.டி.ராகவன், “சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு அதிமுக எடுத்த சில தவறான முடிவுகளே காரணம். பாஜவுடனான கூட்டணியால் அதிமுக தோல்வி என்ற சிவி சண்முகத்தின் கருத்து அதிமுகவின் கருத்தா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் தர வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில்,அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“பாரதீய ஜனதா கட்சி மீதும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது.

தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதீய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.”என்று தெரிவித்துள்ளார்.