இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை..! ரயில், விமானம், பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்.!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது.

இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை வரையில் பொதுபோக்குவரத்து முடங்கியது.

மிக்ஜாம் புயல்.! திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடந்த 2 நாட்களாக மின்சார ரயில், பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவை ஆகியவை முடங்கின. தற்போது சென்னையில் முக்கிய இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.  நேற்று மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதே போல விமான சேவை குறிப்பிட்ட வகையில் இயக்கப்பட்டது.

இன்று முதல் விமான சேவை வழக்கம் போல முழுதாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையும் வழக்கம் போல துவங்கியுள்ளது (மழைநீர் வடியாத புறநகர் பகுதிகள் தவிர). மாநகர பேருந்து சேவையும் வழக்கம் போல துவங்கியுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் வெளியூர் செல்வதற்கு எதுவாக ஆம்னி பஸ் சேவை துவங்கியது.

கனமழை காரணமாக சென்னையில் 22 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் தற்போது 13 சுரங்கப்பாதையில் முழுவதும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல துவங்கியுள்ளது. இன்னும் 9 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆவின் பால் விநியோகம் இன்று காலை முதல் வழக்கம் போல செயல்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுளளார்.