Aditya-L1: நிலவு, பூமியை படம் பிடித்த ஆதித்யா.! விண்கலத்தின் செல்ஃபியையும் வெளியிட்ட இஸ்ரோ.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும்.

இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும். ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. தற்போது வரை ஆதித்யா எல்1 விண்கலத்தின் இரண்டு கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னை தானே புகைப்படம் எடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT), விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய இரண்டு பேலோடுகள் தெரிகிறது. அதோடு பூமி மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து ஒரு காணொளியாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.