முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் ,  அதன் தற்போதைய நிலை பற்றியும் ஆலோசனைகள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வீட்டு வசதித் துறை, சிறுகுறு தொழில்வளர்ச்சி துறை , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை , ஆதிதிராவிடர் நல துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட 8 துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட துறையின் அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன், முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அந்தந்த துறையில் செயலாளர்கள் என முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் முதல்வர் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்தும் , அதன் செயல்பாடுகள் குறித்தும் நாளை துவங்க உள்ள இரண்டாம் கட்ட முகாம்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.