ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்..! விண்ணில் செலுத்தி சாதனை படைத்த சீனா..!

சீனா ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

சீனா நேற்று லாங் மார்ச் 2டி (Long March 2D) ராக்கெட்டை 41 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதற்காக புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது.

இந்த ராக்கெட், ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களின் முக்கிய நோக்கம் வணிக ரிமோட் சென்சிங் சேவைகளை வழங்குவது மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்புக்கு உட்பட்டதாகும்.

இந்த செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை ஜிலின்-1 வகையைச் சேர்ந்தவை. இதனால், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015 ஆம் ஆண்டு சீனா விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.