ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி – மக்களவையில் இன்று மசோதா தாக்கல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் 16 நாள் நடைபெற்று பெற்றது. இன்று 17-ஆவது நாளாக தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுமாக நிறைவு பெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

இருப்பினும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரு சில மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியும் வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி நிர்வாக மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.

மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.