மன்னார்குடியில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து தப்பிய 5 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு!

தனியார் வங்கியில் மன்னார்குடியில்  துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடித்து தப்பிய 5 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திரும்பக்கோட்டை செல்லும் சாலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் கீழ்தளத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. திங்கட்கிழமை மதிய நேரத்தில் இரண்டு பேர் வங்கிக்கு வந்து வரைவு காசோலை எடுக்க வேண்டுமென ஊழியர்களை அணுகினர். ஆனால் உணவு இடைவேளை என்றும் சிறிது நேரம் கழித்து வருமாறும் அவர்களை ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

சற்று நேரத்தில் எல்லாம் மேலும் மூன்று பேருடன் திரும்பி வந்த அவர்கள் இருவரும், வங்கி மேலாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். இருவர் வங்கி ஊழியர்களை தாக்கி லாக்கர் சாவியை தருமாறு கேட்க, ஒரு கொள்ளையன் வாசலை மூடி யாரும் உள்ளே நுழையாதவாறு காவலில் ஈடுபட்டான்.

இதனிடையே வங்கி லாக்கர் சாவியை வாங்கிய கொள்ளையர்கள் அதனை திறக்க முயன்றனர். பதற்றம் காரணமாக அவர்களால் அதனை திறக்க முடியவில்லை, இதனால் ஆத்திரமடைந்த ஒரு கொள்ளையன்,துப்பாக்கியால் தரையில் சுட்டு வங்கி ஊழியர்களை மிரட்டி, லாக்கரை திறக்க வைத்தான். உள்ளே இருந்த 80 கிராம் தங்க நகைகள் எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், காசாளரை மிரட்டி அவரிடம் இருந்த 6 லட்ச ரூபாயையும் கொள்ளையடித்தனர்.

பின்னர் வங்கியில் இருந்து கண்காணிப்பு கேமிராவை துண்டித்து, அதனுடன் இணைந்த காட்சி பதிவு கருவியை தூக்கிக் கொண்டு வங்கியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர் வங்கி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளையர்கள் ஒரு பழைய மாடல் பியட் காரில் வந்ததும், அவர்கள் நெல்லை வட்டார வழக்கில் பேசியதும் தெரியவந்தது.

கொள்ளையர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்துள்ள போலீசார் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். கொள்ளை நடைபெற்ற வங்கியை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு, தஞ்சை சரக டி.ஐ.ஜி உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment