குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த  நாகஜோதி – தினேஷ் தம்பதிக்கு கடந்த 12ம் தேதி சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா, இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்பனை செய்ய இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பின் நாகஜோதி – தினேஷ் தம்பதியிடம் பிறந்த குழந்தையை விற்று விடுமாறு மருத்துவர் அனுராதாவும் கூறியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதினர் நாமக்கல் கலெக்டர் உமா எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்ததை அடுத்து அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாளை கைது செய்யப்பட்டனர். அதாவது, இரண்டுக்கு மேல் கூடுதல் குழந்தைகள் பிறந்திருந்தது என்றால், ரூ.2 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்வதை மருத்துவர் அனுராதா, கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.