அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.

அதாவது, மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். திண்டுக்கல் தோமையார்புரம் அருகே லஞ்ச பணத்தை பெற்று காரில் வைத்து தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்தனர்.

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்..!

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயன பவுடர் தடவிய பணத்தை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பியிருந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டது குறித்து மருத்துவர் சுரேஷ் பாபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, திண்டுக்கலில் ரூ.31 லட்சம் லஞ்ச பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடைபெற்ற இச்சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சமயத்தில், அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாக செயல்பட்டு, கையும், மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது.

இதன்மூலம் பாஜகவின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது. அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியவேண்டும். நாடு முழுவதும் அமலாத்துறையில் இதுபோன்று லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதனால், நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டும் என்றுள்ளார்.