மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை.

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கவுள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.  ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான்  மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.

இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவிய நிலையில், பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார். மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.

இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதலமைச்சர் அதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.