All-Caste Priests : கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு.!

கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஆவதற்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியில் சேர முடியும் என்பதை மாற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழக அரசு துவங்கி செயல்படுத்தி வருகிறது. அதற்காக 1 வருட அர்ச்சகர் படிப்பை அரசு அளித்து வருகிறது.

திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய ஊர்களில் தலா 1 பயிற்சி பள்ளி வீதம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2022 -2023 ஆம் ஆண்டுக்கான ஒருவருட பயிற்சியை 94 பேர் முடித்துள்ளனர்.  அதில் 3 பேர் பெண்கள் அடங்குவர். இவர்களுக்கு அண்மையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு வருட பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா எனும் 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் பயிற்சி முடித்து பயிற்சி சான்றிதழ் பெற்றனர். மேலும் 3 வருட பயிற்சி முடித்துவர்களுக்கு ஓதுவார் பயிற்சி சான்றிதழையும் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.  அதே போல இந்தாண்டு 15 பெண்கள் அர்ச்சகர் பயிற்சிக்கு சேர்ந்துள்ளனர்.

இங்கு ஒருவருட அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்ளுக்கு அடுத்ததாக ஏதேனும் ஒரு கோவிலில் குறிப்பிட்ட கால அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு கோவில்களில் எப்போது காலிப்பணியிடங்கள் வருகிறதோ அப்போது இவர்களுக்கு விதிகளின்படி பணி வழங்கப்படும். பெண்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X  சமூக வலைத்தளத்தில் ஓர் பதிவை குறிப்பிட்டு இருந்தார்.  அதில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.