ராஜினாமா செய்யத்தயார்; WFI தலைவர் பிர்ஜ் பூஷன் சரண் சிங் அறிவிப்பு.!

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் முடிவுக்கு வந்தால், நான் ராஜினாமா செய்யத்தயார் என WFI தலைவர் பிர்ஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். 

டெல்லி ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவர் பிர்ஜ் பூஷன் சரண் சிங் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சம்மதித்தால், தான் தனது பதவியை மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினரான பிர்ஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிர்ஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என அறிவித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதன்பிறகு பிர்ஜ் பூஷன் சிங் மீது புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்பட்டது, இந்த சமயத்தில், எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ஆதரவுகள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிர்ஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சம்மதித்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார், ஆனால் ஆனால் குற்றவாளியாக அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமே இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் என்பதால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.