செந்தில் பாலாஜி என்ன புத்தரா? தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுக முயற்சி – அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டி பார்க்கிறது என குற்றசாட்டியுள்ளார்.

ஆளுநரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது. எனவே, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை. தமிழக அரசு கூறுவதை ஆளுநர் அப்படியே ஓப்பிக்க வேண்டுமா? கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில், ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் மாறி மாறி குற்றசாட்டை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர்.

அதுவும் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் செந்தில் பாலாஜி விகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ரத்து செய்வாரா அல்லது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு ஒப்புதல் அளிப்பாரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.