மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்; பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பேனர்ஜி.!

பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் மாபெரும் வெற்றிக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில், அதிகப்படியான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்(டிஎம்சி) முன்னிலை பெற்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 8 ஆம் தேதி பஞ்சாயத்து அமைப்பில் உள்ள 73,000 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது. கிராம பஞ்சாயத்து அளவில் டிஎம்சி 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலையும், எதிர்க்கட்சியான பாஜக 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்கள் காட்டும் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மக்களின் மனதில் நாங்கள்(திரிணாமுல் காங்கிரஸ்(டிஎம்சி) இருக்கிறோம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது என்று மம்தா பானர்ஜி, மேற்குவங்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.