தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த வடகொரியா!

அமெரிக்காவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவை வந்தடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட கொரியா நேற்று பிற்பகுதியில் அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளதாக தென் கொரியாவின் இராணுவம் கூறியுள்ளது.

சமீப காலமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுதல்கள் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.  வட கொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள நீரில் தரையிறங்குவதற்கு முன்பு சுமார் 400 கிலோமீட்டர்கள் (248 மைல்கள்) பறந்ததாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்துவதற்கு வடகொரியா கோபமாக பதிலளித்துள்ளது. அதாவது, அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.

வட கொரியா ஜூலை 1 அன்று கிழக்குக் கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, அதைத் தொடர்ந்து ஜூலை 22 அன்று ஏவுகணை ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.