Sanatanam: உதயநிதி பேசியது தவறு… ஆனால் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் – டிடிவி தினகரன்

தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசியுள்ளார். உதயநிதியின் பேச்சு அடுத்தவர்களின் உணர்வுகளை தூண்டும் வகையிலும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவது போல் உள்ளது. அதனை அவர் திரும்ப பெற வேண்டும்.

ஆனால், அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியம் ஆகாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சோந்தி மாதிரி, அவர் ஆட்சியில் இருக்கும்போது ஒரே நாடு ஓரே தேர்தல் வேண்டாம் என்பார், இப்போது வேண்டும் என்பார் என விமர்சித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றார்.

இப்பதான் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டில் இன்னும் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால், தேர்தல் நடந்த மாநிலங்களில் மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் செலவினம் தான் அதிகமாகும். அதனால் எது செய்தாலும் அரசாங்கம் மக்களிடம் கேட்க வேண்டும் என கூறினார்.

எனவே, இப்போதெல்லாம் இந்த நடைமுறை முடியாது, வேண்டுமானால் இடையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் வைக்கின்ற மாதிரிதான் வரும், யார் வெற்றி பெற்றாலும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன்,  தீய சக்தியும் ஜெயிக்கக்கூடாது, துரோக சக்தியும் ஜெயிக்கக்கூடாது என்பது எங்களின் நோக்கம், அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கவும் தயார் என கூறினேன் எனவும் கூறினார்.

இபிஎஸ்-யுடன் கூட்டணி சேருவதை அமமுக தொண்டர்கள் விரும்பவில்லை, தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓபிஎஸ் சேர்ந்தால் நாங்கள் தனித்து போயிட வாய்ப்பு எனவும் தெரிவித்தார். மேலும், டெல்டா பகுதியை சேர்ந்தவர் என கூறும் முதல்வர், கர்நாடகாவில் தண்ணீரை பெற்று கொடுக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.