தூத்துக்குடியில் 22.. நெல்லையில் 13 உயிரிழப்புகள்.. கணக்கெடுப்பு தொடர்கிறது.! – தலைமை செயலாளர்

கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இரு மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் வெள்ளநீர் புகுந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலர் களத்தில் நின்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரண உதவிகளை அறிவித்தார்.

அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

அதன்பிறகு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அவர் வெள்ள பாதிப்பு குறித்தும் நிவாரண பணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், தென்மாவட்ட பெரு வெள்ளத்தில் கனமழை காரணமாக 750 நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவை எல்லாம் சரி செய்து வருகிறோம். விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும்.

உடைப்புகளை சரி செய்து, அதில் தண்ணீரை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனையும் கணக்கெடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர் தகவல்கள் கூறுகின்றன. மேலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து பாதிப்புகளை நேரில் பார்த்து நிவாரண உதவிகளை அறிவித்துவிட்டு சென்றார். அந்த நிவாரண பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை உயிரிழப்பு, வீடு சேதம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு, தொழிலாளர்களுக்கு அரசாங்கம் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ வங்கி கடன, இன்சூரன்ஸ் மூலமாகவோ உதவிகள் செய்யப்படும்.

கேரளா அரசு தென்மாவட்ட கனமழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே கேரள தலைமைச் செயலாளர் நேரடியாக நம்முடன் வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். நீர்நிலைகள் சரி செய்து தண்ணீர் தேக்கி வைப்பதற்கு கேரளாவில் இருந்து 11 பொறியாளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் நமது பொறியாளர்களுடன் சேர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானிலை அறிக்கை என்பது சவாலாக இருக்கிறது. தற்போது மீட்பு பணிகளை நிறைவு செய்வோம். அதன் பின்னர் மற்றதை கவனித்துக் கொள்ளலாம். தற்போது உடனடியாக மக்களை மீட்டு அவர்களுக்கான அடிப்படை சேவைகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்வோம் என்று செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.