TN Assembly : அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் . அவர் கூறுகையில்,  வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அன்று நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கு மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார் என்று குறிப்பிட்டார்.

அப்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருக்கைகளில் ஏதேனும் மாற்றம் வருமா.? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பழையபடியே இருக்கைகள் அமைக்கப்படும். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக சார்பில் இருந்து எந்த கோரிக்கைகளும் மீண்டும் வரவில்லை என கூறினார்.

இதனால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அமரும் இருக்கைக்கு அருகே துணை தலைவர் இருக்கையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமரவுள்ளார். இதற்கு முன்னதாக அதிமுக சார்பில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதனால் அவர் தான் அந்த இருக்கையில் அமரவைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

அதற்கு பதில் கோரிக்கையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து, அதிமுக சார்பில் முறையாக எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான். அதனால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மாற்ற கூடாது என்று தெரிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்பதால் அவரது கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது எனவும் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.