நீக்கம் நிறுத்தி வைப்புக்கு இதுதான் காரணம்.. முதலமைச்சருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியானது!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை  வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு  ஆளுநர் கடிதம். 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சென்னை காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமயத்தில் நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி உள்ளிட்ட குற்றவழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியில் செந்தில் தொடர்ந்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களை கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன்பின், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி தரப்பு நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக எழுதிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜியின் நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார். எனவே, மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.