SanatanaDharma : திருமாவளவன் , ஆ.ராசா பேசாதத்தையா நான் பேசிவிட்டேன்.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் ஒரு விழாவில் சனாதனம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. அவர் மீதான எதிர்ப்புகள், விமர்சனங்கள், காவல்துறை புகார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் கடந்த வாரம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்தார்.

இது குறித்து பல்வேறு மேடைகளில், பேட்டிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தான் கூறிய சனாதன ஒழிப்பு பற்றி எந்த வித பின்வாங்கலும் இல்லாமல் அந்த கருத்தில் அமைச்சர் உதயநிதி உறுதியாக உள்ளார்.

தற்போது மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் கூட இதனை உறுதிப்படுத்தினார். மேலும், சனாதானத்தை பற்றி பேசுவதை விட்டுவிடுங்கள். திமுக ஆரம்பிக்கப்பட்டதே அதற்காகத்தான். கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி என்பது இரண்டாம் பட்சம் தான். எப்போதும் எங்கள் கொள்கையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். கடந்த 200 ஆண்டுகளாக சனாதனத்தை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருகிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் சனாதனம் பற்றி பேசாததையா நான் பேசிவிட்டேன். நான் இப்போது தான் பேச ஆரம்பித்துள்ளேன். அம்பேத்கர், பெரியார் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே, சனாதனம் பற்றி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்துள்ளனர் என கூறினார்.

சிஏஜி அறிக்கையின்படி 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழலை பாஜக அரசு செய்துள்ளது. அதனைப் பற்றி பேசுங்கள். மணிப்பூரில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு இன்டர்நெட் கிடையாது. செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது. அதனைப் பற்றி பேசுங்கள். சனாதனத்தை பற்றி பேசுவதை விட இதைவைகள் முக்கியமானது என குறிப்பிட்டார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கலைஞர் எப்போது ஆதரித்தார்? எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது இதனை எதிர்த்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஆனால், தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தான் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இப்போது திடீரென ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இப்போது ஆட்சிக்கு வந்த அவர்கள் என்ன செய்வார்கள்? திடீரென்று ஏதேனும் ஒரு மாநிலத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சி கவிழ்ந்தால் அப்போது நிலைமை என்னவாகும்? இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.