அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு இரண்டு முறையும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கூடுதல் விவரங்களை பெற அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்தததாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தன்னிடம் இருக்கும் ஆதரங்களுடன் சேர்த்து கூடுதல் ஆவணங்கள் சேகரிக்க வேண்டும் என்பதற்காக நேரில் ஆஜராகவில்லை என அசோக் தரப்பில் அமலாக்கத்துறையிடம் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.