ஆளுநர் பதவி தேவையற்றது! மோடிக்கு ‘பாட்னா’ பயம் வந்துவிட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி 

தமிழகத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரையும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து, பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது முதல்வர் கூறியதாவது, ஆளுநர் ரவிக்கு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய ஆளாக நேரிடும்.

ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகள்  நடவடிக்கையாகும். ஆளுநர் அரசியல்வாதியாக மாறக்கூடாது, அவர் அரசியல் சட்டப்படிதானே நடக்க வேண்டும். மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவையற்றது.

மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் திமுக அரசை தடுப்பதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது. தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதை பொறுத்து கொள்ள முடியாமல் ஆளுநர் விமர்சனம் செய்து வருகிறார். தமிழகத்தில் முதலீடு செய்யவிடாமல் தடுக்கவே வெளிநாடு செல்வதால் முதலீடு வராது என கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்கு எதிராக விதண்டாவாதம் பேசி வருகிறார் ஆளுநர். தமிழ்நாட்டின் நலனுடன் விபரீத விளையாட்டை ஆளுநர் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார் எனவும் குற்றசாட்டினார் முதல்வர்.

தொடர்ந்து பேசிய முதல்வர், தனக்கு எந்த அதிகாரமும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம். ஆதாரமற்ற, அரசியல் சட்டத்தை மீறிய ஆளுநரின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துகின்றனர் எனவும் கூறினார். மேலும், விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை பாஜக கட்சியின் ஒரு கிளையாக மாறிவிட்டது.

எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாஜகவினர் மீதும் வழக்குகள் உள்ளன. நேர்மையாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறையின் செலக்டிவ் கைதைத்தான் அதிகார துஷ்பிரயோகம் என எதிர்க்கிறோம். பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் எங்களது செயல்பாட்டை தடுக்க முடியாது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு. வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பாஜகவின் அமைச்சரவையில் உள்ளவர்கள் மீதே பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பாஜகவில் சேர்ந்தால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறது எனவும் முதல்வர் விமர்சித்துள்ளார்.

தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழக அமைச்சர்கள் மீது குறிவைத்துள்ளனர். காங்கிரேசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதே நிலைப்பாடு என்று கூறினார். வருமான வரித்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கியது தவறுதான், நான் கண்டித்தேன். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை திமுக அரசு கைது செய்துள்ளது. மேலும், பாட்னா பயம் வந்து விட்டதால் மத்திய பிரதேசத்தில் திமுக, கலைஞரை பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் அனைவரும் வீழ்ந்தது தான் வரலாறு. பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எடுத்த நிலைப்பாடே சரியானது. எங்களுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். ஒரு கூட்டணிக்கு தேவை ஒரு தலைவர் அல்ல, இலக்கு. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி, அரசியல் சாசனம் ஆகியவற்றுக்கு எதிரான பாஜகவை தோற்கடிப்போம் என்ற கொள்கை வகுத்து நாங்கள் செயல்படுகிறோம் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.