சோதனை வளையத்திற்குள் வந்த 2வது அமைச்சர் பொன்முடி.. மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகன் வீட்டிலும் சோதனை.

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து, சென்னை கடந்த மே மாதம் சென்னை, கரூர், கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நாள் முழுவதும் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது. பின்னர் ஜூன் 13-ஆம் தேதி சென்னையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதன்பின், சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை  காவேரி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். பின்னர், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்து சட்டவிரோதம் இல்லை என்றும், செந்தில் பாலாஜியை காவல் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அதிகாரம் உள்ளது  தீர்ப்பளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் விவகாரம் இன்னும் ஓயாத நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதாவது, இன்று சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உட்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு  பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 2006-2011 வரை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை வளையத்திற்குள் வந்த இரண்டாவது அமைச்சர் பொன்முடி ஆவார்.

மத்திய பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். கெளதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியாக இருக்கிறார் கெளதம சிகாமணி.