அமைச்சர்கள் மீதான வழக்கு! 3 நாட்களாக தூங்கவில்லை.. ஒரே மாதிரியான உத்தரவுகள் – ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.  அந்தவகையில், சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அமைச்சர்கள் மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.  மேலும் நீதிபதி கூறுகையில், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துபோகவே செய்கின்றனர்.

உண்மையில் கீழ் நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தீர்ப்புகளுக்கு ஒரு பார்மட்டை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி விடுதலை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு வழக்குகளின் விசாரணையின்போது பின்பற்றப்பட நடைமுறைகள் தவறானவை. சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, குப்பனுக்கும், சுப்பனுக்கு உரித்தானது. இதனால் கண்ணை மூடி கொண்டு இருக்க முடியாது.  லஞ்ச ஒழிப்புத்துறை 2021க்கு பிறகு நிலைப்பாட்டில் இருந்து காண முடிகிறது எனவும் அதிருப்தி தெரிவித்தார். இதற்கு பிறகும் நான் கண்ணை மூடி கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியதாகிவிடும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.

இதையும் படிங்களே! அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவர், விசாரணை அதிகாரிகளின் விசாரணை முறையில் தவறு எதுவும் இல்லை எனவும் ராசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தன்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை செப்.20க்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.