கேப்டன் நன்றாக இருக்கிறார்.. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு இதுதான் – பிரேமலதா விஜயகாந்த்

செயற்குழு, பொதுக்குழுவை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதுபோன்று, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கூட்டணி, பொது வேட்பாளர் என பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது இளைய மகனின் பட பூஜையில் கலந்துகொள்ள செல்வதாக தெரிவித்தார். படத்தின் டைடல் உள்ளிட்ட அனைத்தும் படக்குழு இன்று அறிவிக்கும் என கூறினார். இதையடுத்து பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் நன்றாக உள்ளார், முக்கியமான நேரங்களில் தொண்டர்களை சந்திப்பார் என தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு வருடம் உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை, எங்களுடைய பணிகளை செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்சி தேர்தல் முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, செயற்குழு, பொதுக்குழுவை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு பிறகு தமிழகம் முழுவதும் எங்களது சுற்றுப்பயணம், எங்கள் கட்சி வளர்ச்சி குறித்த பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

இதையடுத்து, நாடாளுமனற்ற தேர்தலுக்கு முன்பு யாருடனும் கூட்டணியா? அல்லது இல்லையா? என்பது குறித்து தேமுதிக தலைவர் அறிவிப்பார். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு என்பது இதுதான். இருப்பினும், மக்கள் எந்த கூட்டணியை ஏற்கிறார்கள், யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு உள்ளேவே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது. இதனால், எந்த கூட்டணி இறுதியாகிறது, எதை மக்கள் ஏற்றுப்பார்கள், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் மாநாடு, செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் நேரங்களில் கேப்டன் விஜயகாந்த் வருவார் எனவும் குறிப்பிட்டார்.