தென்காசி சட்டமன்ற தொகுதி – மீண்டும் தபால் வாக்கு எண்ணிக்கை!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. தென்காசி எம்எல்ஏ பழனி வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆணையிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மீண்டும் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 1,609 தபால் வாக்குகள், அதிமுகவுக்கு 674 தபால் வாக்குகள் கிடைத்தது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.