தமிழக அரசின் பொது பாடத்திட்டம் – ஆளுநரின் கடித்ததால் புதிய சர்ச்சை!

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான அவரது கடிதத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்களும், தன்னாட்சி கலை அறிவியல் முதல்வர்களும் தமிழக அரசின் பொது பாடத்திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். புதிததாக பரிந்துரைக்கப்பட்ட பொது பாட திட்டம், தற்போதைய பாட திட்டத்தை விட பின்தங்கியது என்றும், இந்த பாட திட்டம் தேசிய அளவிலான தர நிர்ணயத்தில் இருந்து வெளியேறிவிடும் எனவும் கருதுகின்றனர்.

உயர்க்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் உள்ளதை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக மானிய குழுவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டதாகவும் ஆளுநர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். உரிய பரிந்துரைகள், வழிகாட்டுதலை பின்பற்றி பல்கலைக்கழகம் அல்லது தன்னாட்சி கல்லூரிதான் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

எனவே தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். மேலும், பல்கலைக்கழக மானிய குழு தன்னாட்சி அதிகாரம்,  பொது பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது. கல்வி பொது பட்டியலில் இருப்பதால் யுஜிசி விதிகளுக்கு எதிராக மாநில அரசு திட்டத்தை  செயல்படுத்த முடியாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது பாடத்திட்டம் தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளருக்கும் ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.