அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் ஆக.29-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆகியோர் வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த மே 22-ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 126 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.