School Time: காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றம்.! முதல்வர் வருகையையொட்டி நடவடிக்கை.!

தேர்தலின் போது திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை நாளை செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க முதல்வர் நாளை காஞ்சிபுரம் செல்கிறார். இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் நகரில் உள்ள அரசு பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையை கவனத்தில் கொண்டு காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அனைத்து அரசு பள்ளிகள் செயல்படும் நேரமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து நெரிசலைக்  கட்டுப்படுத்த பள்ளிகளின் நேரம் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலை 9 மணி முதல் 4 மணி வரை செய்யப்பட்டு வந்த பள்ளிகள் நாளை 8 மணி முதல் 3 மணி வரை செயல்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நாளை முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதலே சிலருக்கு மகளிர் உரிமை தொகை பணம் 1000 ரூபாய் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.