சித்திரை ஆட்டத் திருநாள்: சபரிமலை நடை இன்று திறப்பு!

சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு விசேஷ பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதவாது, திருவிதாங்கூர் அரச குடும்ப கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் பாலராம வர்மா சமூக சீர்திருத்தங்களை செய்தவர்.

அது மட்டும் இல்லாமல், இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அனுமதித்து புரட்சி செய்ததால், ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளில் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இப்படி, கோயிலுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ள அவர், மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இது போல், பல்வேறு சிறப்புகளை செய்துள்ள சித்திரை திருநாள் பாலராம வர்மா மகராஜா பிறந்த நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது தான் சித்திரை ஆட்டத் திருநாளாகும். இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை இன்று (10.11.2023) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதனையடுத்து, நாளை (நவம்பர் 11ஆம் தேதி) அபிஷேகம் முடிந்து, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படும்.