செந்தில் பாலாஜி நீக்கம்: இதற்கு பிறகே ஆளுநர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல்!

ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது ஏனென்றால், செந்தில் பாலாஜி விவகாரம் தான். ஏற்கனவே ஆளுநருக்கும், தமிழக அரசுக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நேற்று மீண்டும் ஆளுநரின் செயலால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி இலாகாக்கள் மாற்றப்பட்டு, அவர் இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சமயத்தில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

ஆளுநரின் நடவடிக்கைகைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் அரசியல் சதி என குற்றச்சாட்டி வருகின்றனர். அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்பின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 மணி நேரத்தில் வாபஸ் பெற்றதாகவும், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்த விவகாரம் தொடர்பாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால் உத்தரவு நிறுத்தப்பட்டதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஆளுநர் இறுதி முடிவு எடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.