ரஃபேல் வாட்ச் விவகாரம் – அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

ஒரு மாதத்துக்கு 3.75 லட்சம் வாடகை கொடுத்து அண்ணாமலை எப்படி குடியிருக்க முடியும்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.

சென்னையில் உள்ள கமலாலயத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஃபேல் வாட்ச் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். இதற்கான பில் இதுதான் என்றும் காண்பித்தார். பின்னர் பேசிய அவர், ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். நண்பரிடம் ரஃபேல் வாட்ச்சை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்ச்சை வாங்கி கேரளாவின் சேரலாதன் எனக்கு கொடுத்ததாகவும் கூறினார்.

 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வாட்சை வாங்கிய சேரலாதன் ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார் என்றார். காவல் பணியில் இருந்தபோது, லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் எனவும் தெரிவித்தார். இதன்பின், திமுகவினர் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். இதையடுத்து, ரஃபேல் வாட்ச் விவகாரம் குறித்து திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

பில் வேறு சீட்டு வேறு, பில்லை காட்ட சொன்னால், சீட்டை காட்டி ஊடகங்களையும், பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறார் என்றும் சொத்து விவகாரங்கள் தொடர்பாக அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கெடு வைத்தார்.இந்த சமயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்ச் பில் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அமைச்சர் கூறுகையில், அண்ணாமலையி வெளியிட்டது பில் இல்லை. 

பில் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். பில் என்ற ஒரு காகித்தை வெளியிட்டார் என சொல்ல வேண்டும். இந்த Excel (வாட்ச் பில்) சீட்ட தயார் பண்ணவா இத்தனை மாசம் ஆனதா? என கேள்வி எழுப்பினார். ரஃபேல் வாட்ச் பில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை, வாட்ச் எண் மாறுபடுவது ஏன்? என்னிடம் வாட்ச் இல்லை, பரிசாக வாங்கினேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியது தானே. வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் என கூறுகிறார்.

ஒரு முறை, இரு முறை தான் நண்பர்கள் செய்வார்கள். தொடர்ந்து யார் அப்படி செய்வார்கள் என கேள்வி எழுப்பினார். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் போடா முடியாதவர், 4 ஆடு மேய்த்தால் ஒரு மாதத்துக்கு 3.75 லட்சம் வாடகை கொடுத்து எப்படி குடியிருக்க முடியும்? என அண்ணாமலை குடியிருப்பு வீட்டின் வாடகை குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வார் ரூமில் இருப்பவர்கள் தான் நண்பர்களா, யார் தருகிறார்கள் என வெளியிட வேண்டும் என்றார். மேலும், சொத்து பட்டியல் தொடர்பாக பேசிய அவர், சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கவேண்டும். அப்போதுதான் அது சரியா தவறா என தெரியும். ஒரு நபருடைய கோமாளித்தனத்துக்கு என்னிடம் பதில் கேட்கிறீர்கள். கடிகார பில்லும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று கூறினார்.

Leave a Comment