இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.! புதுச்சேரி முதல்வர் விளக்கம்.!

புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட 3.8 சதவீத தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் இன்று வெளியானது. இதில், தேர்வெழுதிய 9.4 லட்சம் மாணவ மாணவியர்களில் மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஏப்ரல் 2023ல் 10ஆம் வகுப்பு பொதுதேர்வை புதுச்சேரி, காரைக்காலில் 7797 மாணவர்களும், 7618 மாணவியர்களும் என மொத்தமாக 15,415 பேர் தேர்வு எழுதினர்.

இதில், 13,738 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 89.12 சதவீதம் ஆகும். அரசு பள்ளியில் 78.92 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. புதுசேரியில் 91.5 சதவீதம் பெரும், காரைக்காலில் 79.43 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 91 ஆகும். 7 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.  கடந்த ஆண்டை விட 3.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 123 மாணவ மாணவியர் வெவ்வேறு படங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு 100 சதவீத வெற்றி இலக்கை நோக்கி புதுசேரி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.