திடீரென காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!

மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் மக்களை கண்டதும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கி அவர்களுக்கு வணக்கம் செலுத்தினார். 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

தரிசனம் : பின்னர் அவருக்கான பாதுகாப்பு படையினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. உடன் அவரது மகளும் வந்திருந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் அவரை வரவேற்றார்.

மரியாதை : அதன் பின்னர் மதுரை மீனாட்சி அமமன் கோவில் நிர்வாகம் சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அப்படியே அரசு விருந்தினர் மாளிகைக்கு குடியரசு தலைவர் புறப்பட்டார்.

பொதுமக்கள் உற்சாகம் : அவர் செல்லும் வழியில் தெற்கு ஆவணி மூல வீதியில் குடியரசு தலைவரை காண ஏரளமான பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்த திரௌபதி முர்மு, உடனடியாக வாகனத்தை நிறுத்தி காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து தனது வணக்கத்தை செலுத்தி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். குடியரசு தலைவர் திடீரென காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த சம்பவம் அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Leave a Comment