எதிர்க்கட்சிகள் கூட்டம், எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை- குமாரசாமி.!

பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற, வலுவான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த ஜுன் 23இல் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தின. அடுத்த கூட்டம் பெங்களுருவில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கர்நாடக தலைநகர் பெங்களுருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜனதா தள JD(S) கட்சியின் தலைவருமான குமாரசாமி, பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தனக்கு எதுவும் அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஜனதா தள கட்சியை, தங்களது ஒரு பகுதியாக நினைக்கவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாங்களும் எந்த வித மிகப்பெரிய கூட்டணிக்கட்சியிலும் இணைய போவதில்லை. இதேபோல் பாஜக தரப்பிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், நாங்கள் வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்.